போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சார்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் ஈரோடு சென்னிமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “போக்குவரத்து கழகத்தில் பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகள் ஏழு லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் இயக்கினால் அந்த பேருந்தை கண்டம் செய்து புதிய பேருந்து இயக்கப்பட வேண்டும். ஆனால் 3 லட்சம், 4 லட்சம் கிமீ ஓடிய பழைய பேருந்துகளுக்கு புதிய பாடி கட்டி புதிய பேருந்துகளைப் போல் இயக்குகின்றார்கள். இது எங்கும் இல்லாத விந்தையாக உள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை.தொழிலாளர்களுக்கு கூடுதல் பணி சுமை உள்ளது. ஓட்டுனர் நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கூடுதல் நேரம் பணி வழங்கப்படுகிறது. காலி பணியிடங்களை நிரப்பாமல் இருக்கும் தொழிலாளர்களை வைத்துக்கொண்டு எட்டு மணி நேரத்திற்கு பதிலாக 16 மணி நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் தொழிலாளர்களுக்கு ஓய்வு கிடைக்கவில்லை தனியார் பேருந்துகளில் ஒரு லிட்டருக்கு நான்கரை கிலோமீட்டர் மட்டுமே இயக்குகின்றனர் ஆனால் இங்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ஆறரை கிலோமீட்டர் இயக்க வேண்டும் என கேட்கிறார்கள். நான்கில் ஒரு பங்கு கழிவு செய்ய வேண்டிய பேருந்துகளை உயிரைப் பணயம் வைத்து தொழிலாளர்கள் இயக்குகின்றனர்.கிராமப் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பல பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கிராம பகுதிகளுக்கு சரியான பேருந்து சேவை இல்லை தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்